கட்டுரை

ஈ.வெ.கி.சம்பத்தின் அரசியல்!

நாற்காலிக்கனவுகள்

ஆர்.முத்துகுமார்

ஈரோடு வெங்கட்ட  கிருஷ்ணசாமி சம்பத் என்கிற ஈ.வெ.கி சம்பத், பெரியாரின் அண்ணன் மகன். திராவிட இயக்கத்தில் உருவான கொள்கை சார் அறிவுஜீவி. சொல்லின் செல்வர் என்று புகழப்படும் அளவுக்கு அற்புதமான பேச்சாற்றலுக்குச் சொந்தக்காரர். பெரியார் தொடங்கிய கருஞ்சட்டைப் படையின் முதல் அமைப்பாளர். திராவிடர் கழகத்துக்குள் நெருக்கடி முற்றியபோது அண்ணாவுக்குத் தோள்கொடுத்த அணுக்கத் தம்பி. தி.மு.க.வுக்கான கொள்கைகளை வடிவமைத்த சிற்பிகளுள் முதன்மையானவர். அண்ணா இருந்தபோதே தி.மு.க.வின் அவைத்தலைவராக இருந்த ஆளுமை. தி.மு.க.வின் ஆரம்பகால டெல்லிமுகம். இப்படி ஏகப்பட்ட அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான ஈ.வெ.கி. சம்பத்தின் மற்றொரு முக்கியமான அடையாளம் என்ன தெரியுமா? தி.மு.க.வில் முதல் பிளவை ஏற்படுத்தியவர். 

பெரியார் - மணியம்மை திருமணத்தை முன்னிட்டு திராவிடர் கழகத்துக்குள் பெரும்புயல் வெடித்தது. அப்போது மட்டும் ஈ.வெ.கி. சம்பத் அண்ணாவுடன் செல்லாமல், பெரியாருக்குத் துணையாக, பெரியாருக்கு ஆதரவாக நின்றிருந்தால், அவருடைய அரசியல் வாழ்க்கையின் திசைவழிப்பாதை வேறெங்கோ சென்றிருக்கும். ஆனால் அண்ணாவின் தம்பியாக அவரை நம்பி வந்து, திமுகவின் நிர்மாணப் பணிகளில் தீவிரமாகச் செயல்பட்டு, தி.மு.க.வுக்குக் கொள்கை, கோட்பாட்டு முகங்களை உருவாக்கியவர்களுள் முதன்மையானவராக மாறினார் ஈவெகி சம்பத்.  

இப்படி தி.மு.க.வுக்குள் அறிவுத்தளத்திலும் அரசியல் தளத்திலும் தீவிரமாக இயங்கிவந்த ஈ.வெ.கி. சம்பத்துக்கு தி.மு.க.வின் முன்னணித் தலைவர்கள் சினிமாவைச் சுற்றிச்சுற்றி வருவதிலும் வளர்வதிலும் விருப்பமில்லை. சித்தாந்தம் பேச வேண்டிய மேடையில் சினிமா பேசுவதை அவர் வெறுத்தார். அதை முதலில் மென்மையாகச் சொன்னார். பின்னர் உரத்த குரலில் சொன்னார். அவருடைய கருத்துக்கு ஆதரவாக அண்ணாவிடமிருந்து பெரிய சலனங்களில்லை. இன்னொரு பக்கம், கருணாநிதி போன்றோரின் அணுகுமுறைகளும் செயல்பாடுகளும் சம்பத்துக்குப் பிடித்தமானதாக இல்லை. அவர்களுடைய  வளர்ச்சியையும் சம்பத்தால் செரித்துக்கொள்ள முடியவில்லை.

திமுகவின் மாயவரம் பொதுக்குழுவில் ஆரம்பித்த ஈவெகி சம்பத் - மு.கருணாநிதி மோதல் வேலூர் பொதுக்குழுவில் அப்பட்டமாக அம்பலத்துக்கு வந்தது. அவைத்தலைவர் பதவிக்கு அதிக அதிகாரம், பொருளாளர் பதவிக்கு பொறுப்புகள் குறைப்பு என்பதுதான் பிரச்னைக்குக் காரணமாக அமைந்தது. அப்போது திமுகவின் அவைத்தலைவராக ஈவெகி சம்பத்தும் பொருளாளராகக் கருணாநிதியும் இருந்தனர். சர்ச்சைக்கு இதற்குமேல் வேறென்ன காரணம் வேண்டும்? பொதுக்குழுவில் தள்ளுமுள்ளுகளும் கைகலப்புகளும் நடந்தன. பின்னர் அவைத்தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார் சம்பத். 

அத்தோடு பிரச்னை முடிந்தது என்றுதான் நினைத்தார்கள். ஆனால் பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் சம்பத் ஆதரவாளரான கவிஞர் கண்ணதாசன் தாக்கப்பட்டது மீண்டும் பிரச்னையைக் கிளப்பியது. நீதி கேட்டு உண்ணாவிரதம் தொடங்கினார் சம்பத். தி.மு.க உடைவதற்கான எல்லா காரியங்களும் நடந்துவருவதாக பத்திரிகைகள் பரபரப்பு காட்டின. சம்பத்தைச் சமாதானம் செய்யும் நடவடிக்கைகளை எடுத்தார் அண்ணா. ஆனால் அது எதிர்பார்த்த பலனைத் தரவில்லை.  உச்சகட்டமாக, தி.மு.க.வில் இருந்து வெளியேறிய சம்பத், 1961ல் தமிழ்த்தேசியக் கட்சியைத் தொடங்கினார்.

ஆம், நேற்றுவரை திராவிடக் கொள்கைகளைப் பேசி, திராவிட நாடு கோரிக்கையை வலியுறுத்தி வந்த ஈ.வெ.கி சம்பத், இப்போது தமிழ்த்தேசியம் பேசத் தொடங்கினார். திராவிட நாடு கோரிக்கையை வலியுறுத்தாமல், இந்தியக் கூட்டரசுக்குள் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய தமிழ்த்தேசியம்தான் சரியான பாதை என்றார் ஈ.வெ.கி சம்பத். 

சரியாகச் சொல்லவேண்டும் என்றால், தி.மு.க.வில் இருந்து விலகும்வரைக்கும் தனிமனித கருத்து வேறுபாடுகளே அதிகம் விவாதத்தில் இருந்தன. தமிழ்த்தேசியம் பற்றி செயற்குழு, பொதுக்குழுக்களில் விவாதங்கள் ஏதும் நடந்திருக்கவில்லை. தனிப்பட்ட சந்திப்புகளில், விவாதங்களில் பேசப்பட்டன. பகிரங்கமாகப் பேசப்படவில்லை. ஆனால் பிரிந்தபோது தமிழ்த் தேசியம், சித்தாந்தப் பிரச்னை என்று சொன்னார் சம்பத். தமிழ்த்தேசியம் பற்றிய சம்பத்தின் கருத்துகளுக்கு அவருடைய பழைய உரைகளில் இருந்தே பதில்களைக் கொடுத்தார் அண்ணா. 

தி.மு.க.விலிருந்து ஈ.வெ.கி சம்பத் விலகியபோது அவரோடு சேர்ந்து விலகியவர்கள் பட்டியல் ஆச்சரியமூட்டும். ஆம், கண்ணதாசன், பழ. நெடுமாறன், முனு ஆதி, க.ராசாராம், எம்.பி.சுப்ரமணியம், கோவை செழியன், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், வாழப்பாடி ராமமூர்த்தி, சின்னக்குத்தூசி ஆகியோர் ஈவெகி சம்பத்தோடு சேர்ந்து தி.மு.க.விலிருந்து விலகினர். இவர்களில், பழ.நெடுமாறன் பின்னாளில் காங்கிரஸின் முக்கியத்தலைவராக விளங்கி, ஈழத்தமிழர் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து, மீண்டும் தமிழ்த்தேசியப் பாதைக்குத் திரும்பிவிட்டார். எம்.பி சுப்ரமணியமும் வாழப்பாடி ராமமூர்த்தியும் பின்னாளில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர்களாக வந்தனர். எஸ்.ஆர். பாலசுப்ரமணியம் காங்கிரஸ், தமாகா என்று செயல்பட்டு, தற்போது அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். 

தி.மு.க.வுக்கு எதிராகக் களம் கண்ட தமிழ்த்தேசியக் கட்சி தேர்தல் அரசியலிலும் இறங்கியது. ஆம், கட்சி தொடங்கிய ஓராண்டிலேயே பொதுத்தேர்தலைச் சந்திக்கவேண்டிய நிர்பந்தம். அந்தத் தேர்தலில் தென் சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார் ஈ.வெ.கி சம்பத். அதற்கு அவர் சொன்ன காரணம், சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திப்பேன் என்பதுதான். 

அந்தச் சமயத்தில் தி.மு.க.வின் கோட்டையாகவே சென்னை மாவட்டம் இருந்தது. சம்பத்தின் கருத்துக்கு பதில் சொன்ன அண்ணா, ‘‘சிங்கத்தின் குகைக்குள் செல்வது பெரிய விஷயமில்லை, ஆனால் வெளியே வருவது ஆளா, சிங்கமா என்பதுதான் முக்கியம்'' என்றார். தேர்தலின் முடிவில் தி.மு.க வேட்பாளர் நாஞ்சில் மனோகரனிடம் தோற்றுப்போனார்  ஈ.வெ.கி. சம்பத். அவருடைய கட்சியும் படுதோல்வியைச் சந்தித்தது.

ஈ.வெ.கி சம்பத் மற்றும் தமிழ்த்தேசியக் கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருந்த நிலையில் நேரு மரணம் அடையவே, அது ஈ.வெ.கி சம்பத்துக் கான புதிய அரசியல் பாதையைத் திறந்துவைத்தது. ஆம், நேருவின் மறைவுக்குப் பிறகு காங்கிரஸைப் பலப்படுத்த சோஷலிச சக்திகள் எல்லோரும் காங்கிரஸுடன் இணையவேண்டும் என்று அழைப்பு விடுத்தார் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் காமராஜர். அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு கட்சியைக் காங்கிரஸில் இணைத்து விட்டு, தானும் காங்கிரஸுல் சேர்ந்துகொண்டார். திராவிடத்தைத் தீவிரமாகப் பேசி, பிறகு தமிழ்த்தேசியத்தில் நாட்டம் கொண்டு, நேருவாலும் காமராஜராலும் கவரப்பட்டு இந்திய தேசியத்தில் இணைந்து கரைந்துபோனார் சம்பத்.

ஏப்ரல், 2018.